search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு பணி தீவிரம்"

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளதால் கோவை, நீலகிரியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 16 பேர் பலியானார்கள். மேலும் பலர் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோழிக்கோடு, மலப்புரம் நீலம்பூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்கள் தமிழக மாவட்டமான நீலகிரி, கோவை மாவட்டத்தை யொட்டியுள்ளது. இதனால் நிபா காய்ச்சல் பீதி இங்கு அதிகம் உள்ளது.

    நீலகிரி மாவட்டம் சேரம்பாடி, தாளூர், நாடுகாணி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கூலித்தொழிலாளர்கள் வேலை சம்பந்தமாக கேரளா சென்று வருகிறார்கள். இதேபோன்று கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்த காய்ச்சல் தமிழக பகுதியில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு கேரளாவில் இருந்து கக்கநல்லா, பந்தலூர், சேரம்பாடி, தொரப்பள்ளி, கூடலூர் ஆகிய 5 வழிப்பாதை உள்ளது. இங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.

    மேலும் சுற்றுலா தலங்கள், ஆதிவாசி கிராமங்களில் வாகனம் மூலம் விழிப்புர்ணவு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதிலுள்ள சுகாதார நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் இந்த நோய்குறித்து எந்த அறிகுறிகளும் இல்லை என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

    மாவட்ட நியமன அலுவலர் கருணாநிதி பழ வியாபாரிகளிடம் பறவை கடித்த பழங்கள், அழுகிய பழங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

    தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடி மற்றும் பொள்ளாச்சியிலும் சுகாதார துறையினர் முகாமிட்டு வாகன பரிசோதனை நடத்தி வருகிறார்கள். கோவையில் இதுவரை இந்த காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்தார்.

    ×